28. ஆளெறி பிள்ளை
வருவாரை யெதிர்விலக்கி
ஒருதானாகி யாளெ றிந்தன்று.

(இ - ள்.) பொருவாரை எதிரே விலக்கித் தானொருவனுமேயாகி வீரரை வெட்டியது எ-று.

(வ - று.)
பிள்ளை கடுப்பப் பிணம்பிறங்க வாளெறிந்து
கொள்ளைகொ ளாயந் தலைக்கொண்டார் - எள்ளிப்
பொருதழிந்து மீளவும் பூங்கழலான் மீளான்
ஒருதனியே நின்றா னுளன்.

(இ - ள்.) விளைவறியாத பிள்ளையையொப்பப் பிணம் பெருக்க வீரரை வெட்டி வெட்சியார் கொள்ளைகொண்ட ஆனிரையைக் கிட்டினார் இகழ்ந்து பூசற்செய்து கெட்டு மீண்டுபோகவும் மீளானாகித் தனியேநின்றான் ஒரு பூங்கழலானுளன் எ - று.

(7)