284. இதுவுமது
திருவளர் நன்னக ரடைந்த கொழுநன்
பெருவள மேத்தினு மத்துறை யாகும்.

(இ - ள்.) செல்வம் பெருகும் அழகிய மாளிகையிலே சேர்ந்தகணவன்றன் பெரிய செல்வத்தை வாழ்த்தினும் முற்பட்ட துறையேயாம் எ-று.

(வ - று.)
ஊழிதோ றூழி தொழப்பட் டுலைவின்றி
ஆழிசூழ் வையத் தகமலிய-வாழி
கருவரை மார்பினெங் காதல னல்க
வருவருந் தோம்பும் வளம்.

(இ - ள்.) நெடுங்காலந்தோறும் நெடுங்காலந்தோறும் வணங்கப்பட்டுக் கேடின்றிக் கடல் சூழ்ந்த பாரகம் பெருக வாழ்வதாக!வலிய மலைபோன்ற அகலத்தினையுடைய எம் கணவன் அருள யான் வருகிற விருந்தைப் போற்றுஞ் செல்வம் எ-று.

வளம் வாழி.

பெயரெடுத்துக் கூறியவழிப் புறப்புறமாம்; நெடுநெல்வாடை போலப் பெயரோடு அடாது கூறியவழிப் பெருந்திணையாம்; இவை பிறர் மதமென்றலுமொன்று.

(10)