288. உட்கொள்
இணரார் கோதையென் னெஞ்சத் திருத்தும்
உணரா ளென்னையென வுட்கொண் டன்று.

(இ - ள்.) கொத்து நிறைந்த மாலையினையுடையாள் என் மனத்திலே இருந்தும் என்னை அறியாளென உள்ளத்திலே தலைவன் கைக்கொண்டது எ-று.

(வ - று.)
கவ்வை பெருகக் கரந்தென் மனத்திருந்தும்
செவ்வாய்ப் பெருந்தோட் டிருநுதலாள் - அவ்வாயில்
அஞ்சொன் மாரிபெய் தவியாள்
நெஞ்சம் பொத்தி நிறைசுடு நெருப்பே.

(இ - ள்.) ஆரவாரம் மிக மறைந்து என்நெஞ்சிலேயிருந்தும், சிவந்த வாயினையும் பெரியதோளினையும் அழகிய நுதலினையும் உடையவள் அழகிய வாயிடத்து அழகிய வார்த்தையாகிய மழையைச் சொரிந்து ஆற்றாள்; என்மனத்திலேகலந்து என்னுடைய நிறையுடைமையைச் சுடா நின்றது காமத் தீ எ-று.

காமதிதீயை அஞ்சொல்மாரி பெய்து அவியாளென்க.

உட்கோளாவது உறலாமென்பதனை உட்கொள்கை.

(4)