அழிபட ரெவ்வங் கூர வாயிழை பழிதீர் நன்னலம் பாராட் டின்று. (இ - ள்.) மிக்குநடக்கும் விதனஞ் சிறக்க, தெரிந்த ஆபரணத்தினை யுடையாந்தன் குற்றந் தீர்ந்த அழகிய நலத்தைக் கொண்டாடியது எ-று. (வ - று.) அம்மென் கிளவி கிளிபயில வாயிழை கொம்மை வரிமுலை கோங்கரும்ப - இம்மலை நறும்பூஞ் சார லாங்கண் குறுஞ்சுனை 1மலர்ந்தன தடம்பெருங் கண்ணே. (இ - ள்.) அழகிய மெல்லிதான வார்த்தையைக் கிளி பழகத் தெரிந்த ஆபரணத்தினையுடையாள்தன் குவிந்து அழகியவான கொங்கையைக் கோங்கு முகிழ்ப்ப இந்த வரையிடத்து நாறுமலரினையுடைய மலைப்பக்கத்துச் சிறுசுனைக் குவளைகள் பூத்தன, மிகப் பெரிய விழியினை எ-று. நற்காமத்து நலம்பாராட்டல் புணர்ச்சி தோன்ற வரும்; இஃது அன்னதன்று. (6)
1. பு.வெ. 205 : 2; முருகு . 75. |