292. புணரா இரக்கம்
உணரா வெவ்வம் பெருக வொளியிழைப்
புணரா விரக்கமொடு புலம்புதர வைகின்று.

(இ - ள்.) பிறறியாத துக்கம் மிகச் சுடர்விடும் ஆபரணத்தையுடையாளை மணவாத விதனத்தோடே தனிமையுறத் தங்கியது எ-று.

(வ - று.)
இணரார் நறுங்கோதை யெல்வளையாள் கூட்டம்
புணராமற் பூச றரவும் - உணராது
தண்டா விழுப்படர் நலியவும்
உண்டா லென்னுயி ரோம்புதற் கரிதே.

(இ - ள்.) தொத்து நிறைந்த நறிய மாலையினையும் இலங்குந்தொடியினையுமுடையாள் தன் புணர்ச்சி கூடாமையாலே பிறிரிகழும் ஆரவாரம் உண்டாகவும் , அறியாது கெடாத சீர்மையினையுடைய நினைவு வருத்தவும் சிறிது உளதால், என்னுடைய உயிர், இனிப் பாதுகாத்தற்கு அரிது எ-று.

(8)