293. வெளிப்பட இரத்தல்
அந்தழை யல்கு லணிநலம் புணரா
வெந்துயர் பெருக வெளிப்பட விரந்தன்று.

(இ - ள்.) அழகிய தழையணிந்த அல்குலினையுடையாள்தன் நல்ல நலத்தைக் கூடாத வெய்ய வருத்தம் மிகத் தோன்ற இரந்தது எ-று.

(வ - று.)
உரவொலி முந்நீ ருலாய்நிமிர்ந் தன்ன
கரவருங் காமங் கனற்ற - இரவெதிர
முள்ளெயி றிலங்கு முகிழ்நகை
வெள்வளை நல்காள் விடுமென் னுயிரே.

(இ - ள்.) வலிய ஆரவாரத்தினையுடைய 1கடல் கடந்தேறிப் பரந்தாலொத்த ஒளித்தற்கரிய ஆசை அழற்ற இரத்தலெதிர முட்போன்ற பல்லு விளங்கும் மூரன்முறுவலையும் வெள்வளையினையும் உடையாள் அருளாள், விடும் என்னுடைய உயிர் எ-று.

(9)

1. கடலன்ன காமம் : குறள். 1137.