ஒன்றார் கூறு முறுபழி நாணி மென்றோ ளரிவை மெலிவோடு வைகின்று. (இ - ள்.) பொருந்தாதார் சொல்லும் மிக்க அலருக்கு நாணி மெத் தென்ற தோளினையுடைய தலைவி வாட்டத்துடனே தங்கியது எ-று. (வ - று.) குரும்பை வரிமுலைமேற் கோல நெடுங்கண் அரும்பிய வெண்முத் துகுப்பக் - கரும்புடைத்தோட் காதல்செய் காமங் கனற்ற ஏதி லாளற் கிழந்தனெ னெழிலே. (இ - ள்.) குரும்பைபோன்ற நல்ல முலைமேலே அழகிய நெடியவிழி தோற்றிய வெண்முத்தான கண்ணீரைச் சிந்தச் சந்தனகுங்குமங்களாற் காமனது கரும்பெழுதிய தோளினைத் தழுவவேண்டுமென்னும் ஆசையைப் பண்ணும் விழைவு கனற்ற நமக்கு அருளாத அயலானுக்குப் போக்கினேனே என் அழகினை எ-று. (4) |