298. மெலிவொடு வைகல்
மணிவளை நெகிழ மாநலந் தொலைய
அணியிழை மெலிவி னாற்றல் கூறின்று

(இ - ள்.) மாணிக்கத்தொடி கழலப் பெரிய அழகு கெட அழகிய ஆபரணத்தினையுடையாளது தளர்ச்சியின் வலிமையைச் சொல்லியது எ-று.

(வ - று.)
பிறைபுரை வாணுதல் பீரரும்ப மென்றோள்
இறைபுனை யெல்வளை யேக - நிறைபுணையா
யாம நெடுங்கட னீந்துவேன்
காம வொள்ளெரி கனன்றகஞ் சுடுமே.

(இ - ள்.) இளமதியை யொத்த ஒளிநுதல் பீர்போலப் பசப்புத்தோற்ற மெத்தென்ற தோளின் முன்கையில் அணிந்த இலங்குதொடி ஓட நிறையே தெப்பமாக யாமமாகிய பெரியகடலை நீந்தாநிற்பேனாயினும், ஆசையென்னும் ஒள்ளிய நெருப்பு அழன்று நெஞ்சை எரிக்கும் எ-று.

(5)