30. பிள்ளை யாட்டு
கூடலர்குடர் மாலைசூட்டி
வேறிரித்து விரும்பியாடின்று.

(இ - ள்.) பகைவர்குடராகிய மாலையைச் சூட்டிக் கையிலே வேலைத்திருப்பிப் பிரியப்பட்டு ஆடியது எ-று.

(வ - று.)
1மாட்டிய பிள்ளை மறவர் நிறந்திறந்து
கூட்டிய வெஃகங் குடர்மாலை - சூட்டியபின்
மாறிரியச் சீறி நுடங்குவான் கைக்கொண்ட
வேறிரிய விம்முந் துடி.

(இ - ள்.) பகைவரை மாளப்பண்ணின பிள்ளைத்தன்மையை எய்தியவன், வீரருடைய மார்பங்களைத் திறந்து தெரிந்து பறித்தவேலைப் பகைவருடைய குடர்மாலையைச் சுற்றியபின் மாறுபாடு கெடக்கோபித்து ஆடுமவன் கைக்கொண்ட வேலைத் திருப்பக் கறங்கா நின்றது துடி எ - று.

(9)

1. தொல். புறத். சூ. 5, இளம். மேற்.