300. பகன்முனிவுரைத்தல்
புரிவளை நெகிழப் புலம்பொடு நின்றோள்
பருவர லுள்ளமொடு பகன்முனி வுரைத்தன்று.

(இ - ள்.) முறுக்குவளை சோரத் தனிமையுடனே நின்ற தலைவி துயரமிக்க உள்ளத்தோடே பகற்பொழுதை வெறுத்தபடியைச் சொல்லியது எ-று.

(வ - று.)
தன்க ணளியவாய் நின்றேற்குத் தார்விடலை
வன்கண்ண னல்கா னெனவாடும் - என்கண்
இடரினும் பெரிதா லெவ்வம்
படரினும் பெரிதாற் பாவியிப் பகலே.

(இ - ள்.) தன்னிடத்து அருளை ஆசைப்பட்டுநின்ற எனக்கு மாலையினையுடைய தலைவன் தறுகண்ணன் அருளானெனச் சொல்ல மெலியும் என்னிடத்து வருத்தத்திலும் பெரியதொன்றால், மானம்; என்னுடைய நினைவிலும் பெரிதால், பாவியான இப்பகற்பொழுது எ-று.

(7)