301. இரவுநீடு பருவரல்
புலம்பொடு வைகும் பூங்குழை கங்குற்
கலங்கினேன் பெரிதனக் கசிந்துரைத் தன்று.

(இ - ள்.) தனிமையுடனே தங்கும் பொலிந்த குழையினை யுடையாள் இரவின்கண் மனமயங்கினேன் பெரிதெனச் சொல்லி நெகிழ்ந்து சொல்லியது எ-று.

(வ - று.)
பெண்மே னலிவு பிழையென்னாய் பேதுறீஇ
விண்மே லியங்கு மதிவிலக்கி - மண்மேல்
நினக்கே செய்பகை யெவன்கொல்
எனக்கே நெடியை வாழிய ரிரவே.

(இ - ள்.) பெண்பாலிடத்து நெருக்கும் நெருக்குத் தப்பென்றுபாராய், அறிவின்மையுற்று ஆகாசத்திடத்தே உலாவுமதியைப் போகாதபடி விலக்கி; பூமியிடத்து நினக்கு யான்செய்த மாறுபாடு எவன்கொலோ ? எனக்கே நீ நெடியையாயிருந்தாய்; வாழ்வாயாக, இரவுப்பொழுதே எ-று.

(8)