311. இரவுத்தலைச் சேறல்
காண்டல் வேட்கையொடு கனையிரு ணடுநாள்
மாண்ட சாயன் மனையிறந் தன்று.

(இ - ள்.) தலைவனைக் காணவேண்டுமென்னும் ஆசையோடு செறிந்த இருளையுடைய ஒத்த யாமத்து மாட்சிமைப்பட்ட மென்மையாள் தன் இல்லினின்று இறந்தது எ-று.

(வ - று.)
1பணையா வறைமுழங்கும் பாயருவி நாடன்
பிணையார மார்பம் பிணையத் - துணையாய்க்
கழிகாம முய்ப்பக் கனையிருட்கட் செல்கேன்
வழிகாண மின்னுக வான்.

(இ - ள்.) வீரமுரசென்னக் கற்பாறையிடத்து ஒலிக்கும் பரந்த அருவியாற்பொலிந்த நாடான் மூட்டுவாயினையுடைய ஆரமார்பத்தைத் தழுவ எனக்குத் துணையாய் மிக்க ஆசை செலுத்தச் செறிந்த இருளிடத்துப் போவேன், நெறியைக் காண மின்னுவதாக, மேகம் எ-று.

(6)

1. தொல். அகத். சூ. 54, இளம். மேற்.