312. இல்லவை நகுதல்
இல்லவை சொல்லி யிலங்கெயிற் றரிவை
நல்வய லூரனை நகைமிகுத் தன்று.

(இ - ள்.) உள்ளனவல்லாதவற்றை உரைத்து விளங்கும் பல்லினை யுடைய மடவாள் அழகிய பழனஞ்சூழ்ந்த ஊரனை நகையைப் பெருக்கியது எ-று.

(வ - று.)
முற்றா முலையார் முயங்க விதழ்குழைந்த
நற்றா ரகல நகைதரலின் - நற்றார்
கலவே மெனநேர்ந்துங் காஞ்சிநல் லூர
புலவேம் பொறுத்த லரிது.

(இ - ள்.) இளமுலையினையுடையார் தழுவப் பூந்தோடு வாடின அழகிய மாலையினையுடைய மார்பம் சிரிப்பைத் தருதலின், அழகிய மாலையினை மணவேமென நிச்சயித்தும் காஞ்சிமரத்தினையுடைய அழகிய ஊரனே, ஊடேம்; நின்னுடன் ஊடின் ஆற்றுதல் அரிது எ-று.

அரிது ஆதலிற் புலவேம்.

(7)