313. புலவியுட் புலம்பல்
நலவளை மடந்தை நற்றார் பரிந்து
புலவி யாற்றாள் புலம்புற் றன்று.

(இ - ள்.) அழகிய தொடியினையுடைய மடவாள் தலைவன் மார்பின் மாலையை அறுத்து ஊடலாற்றாளாய்த் தனிமையுற்றது எ-று.

(வ - று.)
ஓங்கிய வேலான் பணியவு மொள்ளிழை
தாங்காள் வரைமார்பிற் றார்பரிந் - தாங்கே
அடும்படர் மூழ்கி யமைமென்றோள் வாட
நெடும்பெருங்க ணீந்தின நீர்.

(இ - ள்.) உயர்ந்த வேலினையுடையான் வணங்கவும் ஒள்ளிய ஆபரணத்தினையுடையாள் கோபத்தைத் தடாளாய் மலையன்ன அகலத்தின் மாலையை அறுத்து அவ்விடத்திலே வருத்துந் துயரத்திலே அழுந்தி மூங்கில் போன்ற மெல்லியதோள்கள் மெலிய, நெடியவாய்ப் பெரியவாகிய கண்கள் நீரிலே மிதந்தன எ-று.

(8)