அணிவய லூரனொ டப்புவிழ வமரும் பணிமொழி யரிவை பரத்தையை யேசின்று. (இ - ள்.) அழகிய பழனத்தையுடைய ஊரனுடனே நீர்விளையாட்டு விரும்பும் மெல்லிய சொல்லினையுடைய தலைமகள் பரத்தையைப் புல்லற் கூறியது எ-று. (வ - று.) யாமுயங்கு மென்முலையால் யாணர் வயலூரன் தேமுயங்கு பைந்தார் திரைமுயங்க - யாமுயங்க எவ்வையர் சேரி யிரவு மிமைபொருந்தாக் கவ்வை கருதிற் கடை. (இ - ள்.) யாம் பொறையாற்றாது வருந்தும் மெல்லிய கொங்கையாலே புதுவளப்பத்தினையுடைய கழனியால் நிறைந்த ஊரனது தேன் தழுவும் செவ்விமாலையைப் புனற்றிரை தழுவா நிற்ப யாம் தழுவா நிற்ப, இதற்கும் எம் தங்கையாராகிய பரத்தையர்சேரி பலரும் உறங்கும் இரவும் கண்ணிமை கூடாத ஆராவாரத்தை நினைப்பிற் சாலப் புல்லியது. எ-று. (10) |