317. காதலிற் களித்தல்
மைவரை நாடன் மார்பகம் பொருந்திக்
கைவிட லறியாக் காதலிற் களித்தன்று

(இ - ள்.) மேகம்பொருந்தின மலைநாடனுடைய மார்பிடத்தே மேவி நீங்குதலறியாத அன்பினால் மகிழ்ந்தது எ-று.

(வ - று.)
காதல் பெருகிக் களிசெய்ய வக்களியாற்
1கோதையுந் தாரு மிடைகுழைய-மாதர்
கலந்தாள் கலந்து கடைக்கண்ணாற் கங்குல்
புல்ந்தாள் புலரியம் போது.

(இ - ள்.) அன்புமிக்குக் களிப்புச்செய்ய அம்மகிழ்ச்சியால் மாலையும் கோதையும் நடுவே வாடக் காதலினையுடையாள் கூடினாள்; கூடிக் கடைக்கண்ணாலே நோக்கி இரவுப்பொழுதை முனிந்தாள், விடியற்காலத்து எ-று.

கங்குல் கழிந்ததென்று புலந்தாள்.

(12)

1. புறநா. 73 : 13-4, குறிப்புரை.