துயரொடு வைகிய சூழ்வளைத் தோளி உயர்வரை நாட னுரைகேட்டு நயந்தன்று. (இ - ள்.) துன்பத்தோடு தங்கிய சூழ்ந்த தொடியினையுடைய தோளி உயர்ந்த மலைநாடன்றன் வார்த்தையைக் கேட்டு விரும்பியது எ-று. (வ - று.) ஆழ விடுமோ வலரொடு வைகினும் தாழ்குர லேனற் றலைக்கொண்ட - நூழில் விரையாற் கமழும் விறன்மலை நாடன் உரையாற் றளிர்க்கு முயிர். (இ - ள்.) துயரக்கடலுள்ளே அழுந்தவிடுமோ? பிறர் தூற்றும் பழியோடு தங்கினும் குளிர்ந்த கதிரையுடைய தினையிலே தலைமணந்த நூழிலென்னும் வல்லியினுடைய மணங்கமழும் வெற்றியான் அமைந்த வரை நாடன் வார்த்தையாலே தளிர்க்கும் என்னுயிர் எ-று. உயிர் ஆழவிடுமோ. ஆல்: அசை. (16) |