324. செல்கென விடுத்தல்
பாயிருட் கணவனைப் படர்ச்சி நோக்கிச்
சேயிழை யரிவை செல்கென விடுத்தன்று.

(இ - ள்.) பரந்த இருட்காலத்துக் கொழுநனைச் செலவைப் பார்த்துச் சிவந்த ஆபரணத்தினையுடைய தலைவி போவாயாகவென்று சொல்லியது எ-று.

(வ - று.)
விலங்குந ரீங்கில்லை வென்வேலோய் சென்றீ
இலங்கிழை யெவ்வ நலியக் - கலங்கிக்
குறியுள் வருந்தாமைக் குன்றுசூழ் சோலை
நெறியுள் விலக நிலா .

(இ - ள்.) நின்னைப் போகாமலே விலக்குவார் இவ்விடத்து ஒருவரும் இல்லை; வென்றிவேலினையுடையோய் , செல்வாயாக; விட்டு விளங்கும் ஆபரணத்தையுடையாள் துன்பம் நெருக்க மயங்கிக் குறியிடத்து நின்னைக் காணாது வருத்தமுறாதபடி மலைசுற்றின சோலையிடத்து வழியுள்ளே விரிவதாக, நிலா எ-று.

விரிக நிலா; வென்வேலோய் சென்றீ.

(19)