உருவ வால்வளை யுயங்கத் தோழி பருவ மயங்கிப் படருழந் தன்று. (இ - ள்.) அழகிய வெள்வளையினையுடையாள் வருந்தப் பாங்கி காலத்தை அன்றாமென மருண்டு வருத்தமுற்றது எ-று. (வ - று.) பெரும்பணை மென்றோள் பிரிந்தாரெம் முள்ளி வரும்பருவ மன்றுகொ லாங்கொல்-சுரும்பிமிரும் பூமலி கொன்றை புறவெல்லாம் பொன்மலரும் மாமயிலு மாலு மலை. (இ - ள்.) பெரிய மூங்கில்போன்ற மெல்லிய தோளினை நீங்கிய தலைவர் எம்மை நினைந்து வருங்காலம் அல்லகொல்லோ?ஆங்கொல்லோ? வண்டொலிக்கும் பூ மிக்க கொன்றை குறுங்காடெல்லாம் பொன்னைப் பூக்கும்;அழகிய மஞ்ஞையும் மலையிடத்தே ஆலியா நிற்கும் எ-று. இது தோழி ஆற்றுவிக்கும் வகை அன்றாதலிற் பெருந்திணையாயிற்று. (6) |