332. ஆண்பாற் கிளவி
காமுறு காமந் தலைபரிந் தேங்கி
ஏமுற் றிருந்த விறைவ னுரைத்தன்று.

(இ - ள்.) வேட்கை மிகும் ஆசை எல்லைகடப்ப ஏக்கமுற்று மயங்கி யிருந்த தலைவன் சொல்லியது எ-று.

பரிந்தென்பதனைப் பரியவென்க.

(வ - று.)
கயற்கூடு வாண்முகத்தாட் கண்ணிய நெஞ்சம்
முயற்கூடு முன்னதாக் காணின் - உயற்கூடும்
காணா மரபிற் கடும்பகலுங் கங்குலும்
நாணாளு மேயா நகை.

(இ - ள்.) கண்ணாகிய இணைக்கயல் பொருந்திய ஒளியாற் சிறந்த முகத்தினையுடையாளைக் கூடக்கருதிய மனம் முயலிற்கு உறைவிடமாகிய மதியை முன்னே காணிற் பிழைத்தல் கூடும்; காணாத முறைமையிற் கொடிய பகலும் இரவும் நாடோறும் நாடோறும் இயையா,மகிழ்ச்சி எ-று.

நகை - பலநாளும் மகிழும் கூட்டங்கள்.

(8)