334. வெறியாட்டு
தேங்கமழ் கோதை செம்ம லளிநினைந்
தாங்கந் நிலைமை யாயறி யாமை
வேங்கையஞ் சிலம்பிற்கு வெறியா டின்று.

(இ - ள்.) மணநாறு மாலையுடையாள் , தலைவனது அருளைக் கருதி அவ்விடத்து அந்நிலைமையைத் தாயறியாதபடி வேங்கைமரத்தாற் பொலிந்த மலையையுடைய முருகற்கு வெறிக்கூத்து ஆடியது எ-று.

(வ - று.)
1வெய்ய நெடிதுயிரா வெற்ப னளிநினையா
ஐய நனிநீங்க வாடினாள் - மையல்
அயன்மனைப் பெண்டிரொ டன்னைசொ லஞ்சி
வியன்மனையு ளாடும் வெறி .

(இ - ள்.) வெவ்விதாகத் தீர்க்க 2சுவாதம் விட்டுத் தலைவனது அருளைக் கருதித் தலைவன் வருவனோ வாரானோ வென்னும் ஐயப்பாடு மிகவும் நீங்க ஆடினாள் , மயக்கத்தினையுடைய அயன்மனை மகளிருடனே அன்னை சொல்லையும் அஞ்சி , அகன்ற மனையிடத்தே ஆடும் வெறிக்கூத்தை எ-று.

ஆடினாள் யார் ? தலைவி.

(10)

1. தொல். புறத். சூ. 5, இளம். மேற்.
2. சுவாதம் : வி.பா. நிவாத கவச. 15.