மாணிழைக்கு வயலூரன் பாண்வரவு பாங்கிமொழிந் தன்று. (இ - ள்.) மாண்ட ஆபரணத்தினை உடையாளுக்கு வயலூரன்றன் பாணன் வரவைத் தோழி சொல்லியது எ-று. (வ - று.) அஞ்சொற் பெரும்பணைத்தோ ளாயிழையாய் தாநொடியும் 1வஞ்சந் தெரியா மருண்மாலை - எஞ்சேரிப் பண்ணியல் யாழொடு பாணனார் வந்தாரால் எண்ணிய தென்கொலோ வீங்கு . (இ - ள்.) அழகிய சொல்லையும் பெரிய வேயன்ன தோளினையும் தெரிந்த ஆபரணத்தினையுமுடையாய் , தாஞ்சொல்லும் பொய்ம்மையை ஆராயமாட்டாத மயக்கஞ்செய்யும் மாலைப்பொழுதின்கண் எமது சேரியிடத்து இசைக்கு ஒத்த யாழுடனே பாணனார் வந்தார்; இவர் கருதிய காரியம் என்னையோ ? இவ்விடத்து எ-று. (11)
1. நன். சூ. 457, மயிலே. மேற்; 458, வி. |