உம்மி லரிவை யுரைமொழி யொழிய எம்மில் வலவனுந் தேரும் வருமெனப் பரத்தை வாயிற்குப் பாங்கி பகர்ந்தன்று. (இ - ள்.) உங்கள் வீட்டிடத்து மடவாள் சொன்ன வாரத்தை நீங்க , எங்கள் அகத்திடத்துப் பாகனும் தேரும் வருமெனச் சொல்லி இற்பரத்தை தோழிக்குச் சேரிப்பரத்தை தோழி சொல்லியது எ-று. (வ - று.) மாணலங் கொள்ளு மகிழ்நன் றணக்குமேற் பேணலம் பெண்மை யொழிகென்பார் - காணக் கலவ மயிலன்ன காரிகையார் சேரி வலவ னெடுந்தேர் வரும் . (இ - ள்.) மாட்சிமைப்பட்ட எமது அழகினைக் கைக்கொள்ளும் தலைவன் எம்மை விட்டு நீங்குவானாயின் , விரும்பேம்; பெண்மைத் தன்மை எம்மிடத்து நீங்குக என்று சொல்லும் இற்பரத்தையர் காணத் தோகை மயிலினையொத்த பரத்தையர்தம் சேரிக்கண் பாகனையுடைய உயரிய தேர் வாராநிற்கும் எ-று. பேணலம் பெண்மையொழிகென்பார் காண வரும். (15) |