356. தேர்வென்றி

(வ - று.)
ஒலிமணித் திண்டே ருடையாரை வெல்லும்
கலிமணித் திண்டேராற் காளை- கலிமாப்
பலவுடன் பூட்டிப் படர்சிறந் தைந்து
செலவோடு மண்டிலஞ் சென்று.

(இ - ள்.) ஒலிக்கும் மணியையுடைய திண்ணிய தேரினையுடைய பகைவரை வெல்லும் , ஆரவாரிக்கும் மணிகளையுடைய திண்ணிய தேராலே காளையானவன்; மனவெழுச்சியையுடைய குதிரை பலவும் ஒக்கப் பூட்டிச் செல்லுதல் மிக்க பஞ்சதாரையுடனே பதினெட்டுச்சுற்று வரவும் அமர்ந்து எ-று.

சென்று வெல்லும்.

(14)