39. வாணிலை
1செற்றார்மேற் செலவமர்ந்து
கொற்றவா ணாட்கொண்டன்று.

(இ - ள்.) பகைவர்மேல் எடுத்துவிடுதலை விரும்பிய வெற்றியினையுடைய வாளைப் புறவீடு விட்டது எ-று.

(வ - று.)
அறிந்தவ ராய்ந்தநா ளாழித்தேர் மன்னன்
எறிந்தில கொள்வா ளியக்கம் - அறிந்திகலிப்
பின்பகலே யன்றியும் பேணா ரகநாட்டு
2நன்பகலுங் கூகை நகும்.

(இ - ள்.) சோதிடநூல் வல்லவர் தெரிந்தநாளிலே வட்டக்காலாற் சிறந்த தேரினையுடைய வேந்தன் வெட்டிவிளங்கும் அழகிய வாளினது புறவீடு விடுதலையுணர்ந்து மாறுபட்டு உச்சிக்குப் பின்பன்றியும் பகைவருண்ணாட்டிடத்து உச்சிப்பொழுதும் கோட்டான் பாடாநிற்கும் எ - று.

(4)

1. சிலப். 5 : 89-94, அடியார்.மேற்.
2. புறநா.356 : 2; 362.17-8.