44. பேராண் வஞ்சி
கேளல்லார் முனைகெடுத்த
மீளியார்க்கு மிகவுய்த்தன்று.

(இ - ள்.) உறவல்லாதார் பெருஞ்செருவைத் தொலைத்த தலைமையையுடைய வீரர்க்குப் பெரிதுங் கொடுத்தது எ-று.

(வ - று.)
பலுபெறு நன்னகரும் பள்ளி யிடனும்
ஒலிகெழு நான்மறையோ ரில்லும்- நலிவொரீஇப்
புல்லா ரிரியப் பொருதார் முனைகெடுத்த
வில்லார்க் கருள்சுரந்தான் வேந்து.

(இ - ள்.) பலியிடும் நல்ல கோயில்களும் துறந்தாரிருக்கும் பள்ளியிடங்களும் ஓசைபொருந்திய நான்கு வேதத்தோர் அகமும் நெருக்குதலையொழிந்து பொருந்தாதார் கெட்டோடப் பொருத வீரர் செருவை வென்ற தன்னுடைய வில்லாளர்க்கு உபகாரம் பண்ணினாள், மன்னன் எ - று.

(9)