45. இதுவுமது
அருந்துறை யளப்ப வாறிய சினத்தொடு
பெரும்பூண் மன்னவன் பெயர்தலு மதுவே.

(இ - ள்.) பெறுதற்கரிய பொருளைப் பகைவர் கொடுப்பத் தணிந்த கோபத்தோடு பேரணிகலங்களையுடைய மன்னன் மீண்டுபோதலும் அத்துறையாம் எ-று.

(வ - று.)
கூடி முரசிரங்கக் கொய்யுளைமா முன்னுகளப்
பாடி பெயர்ந்திட்டான் பல்வேலான்-கோடி
நிதியந் திறையளந்தார் நேராருந் தன்கீழ்
முதியமென் றாறி முரண்.

(இ - ள்.) பல வாச்சியத்தோடும் பொருந்தி முரசு அதிரக் கைக் கத்திரிகையிட்டு நறுக்கின தலையாட்டத்தினையுடைய பரிகள் முன்னே சதியாக நடக்க இருந்த பாசறையினை விட்டுப் பெயர்ந்தான்,பலவேற் படையினையுடையான்;கோடிபொருளைத் திறையாக இவனுக்குப் பகை வருங் கொடுத்தார்,அரசன்றன் அடிக்கீழ்ப் பழையோமென்று சொல்லி மாறுபாடொழிந்து எ-று.

மாறுபாடொழிந்து கோடிநிதியம் திறையளந்தார் நேராரு மென்க.

(10)