47. நெடுமொழி வஞ்சி
ஒன்னாதார் படைகெழுமித்
தன்னாண்மை யெடுத்துரைத் தன்று.

(இ - ள்.) பகைவர் தஞ்சேனையைக் கிட்டித் தன்னுடைய ஆண்மைத் தன்மையை உயர்த்திச் சொல்லியது எ-று.

(வ - று.)
இன்ன ரெனவேண்டா வென்னோ டெதிர்சீறி
முன்னர் வருக முரணகலும்-மன்னர்
1பருந்தார் படையமருட் பல்லார் புகழ
விருந்தா யடைகுறுவார் விண்.

(இ - ள்.) இன்னதன்மையாரென்று சொல்லவேண்டா;என்னுடனே கோபித்து என்முன்னே பொரவருக மாறுபாட்டினை மிகுக்கும் வேந்தர்;பருந்துநிறையும் தானைப்போரிடத்துப் பலரும்போற்ற வீரசுவர்க்கத்திற்குப் புதிராய் அதனிற் கிட்டுதலைப் பெறுவார்கள் எ-று.

(12)

1. புறநா. 179: 11, 269: 11-2.