48. 1முதுமொழி வஞ்சி
தொன்மரபின் வாட்குடியின்
முன்னோனது நிலைகிளந்தன்று.

(இ - ள்.) பழையவரலாற்றினையுடைத்தாய வாளினையுடைய மறக்குடியில் 2தமப்பனுடைய நிலைமையைச் சொல்லியது எ-று.

(வ - று.)
3குளிறு முரசங் குணில்பாயக் கூடார்
ஒளிறுவாள் வெள்ள முழக்கிக்-களிறெறிந்து
புண்ணொடு வந்தான் புதல்வற்குப் பூங்கழலோய்
தண்ணடை நல்கல் தகும்.

(இ - ள்.) முழங்கும் வீரமுரசிலே கடிப்புத்தாக்கப் பகைவருடைய விட்டுவிளங்கும் வாள்வெள்ளத்தைத் துகைத்து யானையை வெட்டிப் புண்ணுடனே வந்தொழிந்தவனுடைய மகனுக்கு, பொலிந்த வீரக் கழலினையுடையோய்,மருதநிலங்களைக் கொடுத்தல் தக்கதாம் எ - று.

மகனென்றமையால் அவன் தமப்பன் பட்டமை விளங்கும்.

(13)

1. தொல். புறத். சூ. 7, இளம்.
2. தனப்பனுடைய
3. நன்.சூ . 458,மயிலை.மேற்.