50. மழபுல வஞ்சி
கூடார்முனை கொள்ளைசாற்றி
வீடறக்கவர்ந்த வினை மொழிந்தன்று.

(இ - ள்.) பகைவர் வேற்றுப்புலத்தைக் கொள்ளையூட்டி அகங்கள் பாழ்படக் கொள்ளைகொண்ட தொழிலைச் சொல்லியது எ-று.

(வ - று.)
களமர் கதிர்மணி காலேகஞ் செம்பொன்
வளமணை பாழாக வாரிக்-கொளன்மலிந்து
கண்ணார் சிலையார் கவர்ந்தார் கழல்வேந்தன்
நண்ணார் கிளையலற நாடு.

(இ - ள்.) அடியாரையும் ஒளிவிடும் வயிர அரதனங்களையும் 1முத்து அரதனத்தினையும் சிவந்த பொன்னினையும் அழகிய அகங்களெல்லாம் வறியவாகத் திரட்டிக் கைப்பற்றிக்கொள்ளும் வகைமிக்குக் கண்ணுக்கு நிறைந்த வில்லாளர் கொள்ளைகொண்டார்,வீரக்கழலினையுடைய அரசன்றன் பகைவர் சுற்றமிரங்க அவருடைய நாட்டை எ-று.

நாடு கண்ணார் சிலையார் கவர்ந்தாரென்க.

(15)

1. முத்திறத்தினையும், முத்தினையும்