66. 1பெருங்காஞ்சி
தாங்குதிறன் மறவர் தத்த மாற்றல்
வீங்குபெரும் படையின் வெளிப்படுத்தன்று .

(இ - ள்.) எதிர்வரும் படையினைத் தடுக்கும் வலியினையுடைய கொடுவினையாளர் தத்தம் வலியை மிக்க பெருஞ்சேனையிடத்துத் தோற்றுவித்தது எ-று.

(வ - று.)
வில்லார் குறும்பிடை வேறுவே றார்த்தெழுந்த
2கல்லா மறவர் கணைமாரி - ஒல்லா
வெருவி மறவேந்தர் வெல்களி றெல்லாம்
இருவி வரைபோன்ற வின்று .

(இ - ள்.) விற்படைநிறைந்த அரணிடத்துப் பலவகையாக ஆரவாரித்து வந்த இயற்கையான மறத்தினையுடையாருடைய அம்புமழையைப் பொறாவாய் வெருண்டு சினமன்னர் போரைவெல்லும் யானைபலவும் , தினையரிந்த தாளினையுடைய மலையையொத்தன , இந்நாள் எ-று.

(6)

1. சிலப். 25 : 136.
2. சிறுபாண். 33; மதுரைக். 420.