76. 1பேய்நிலை
செருவேலோன் றிறநோக்கிப்
பிரிவின்றிப் பேயோம்பின்று .

(இ - ள்.) போரைச்செய்யும் வேலினையுடையாள் திறப்பாட்டை நோக்கி நீங்குதலொழிந்து பேய் பரிகரித்தது எ-று.

(வ - று.)
2ஆயு மடுதிறலாற் கன்பிலா ரில்போலும்
தோயுங் 3கதழ்குருதி தோள்புடைப்பப் - பேயும்
களம்புகலச் சீறிக் கதிர்வேல்வாய் வீழ்ந்தான்
உளம்புகல வோம்ப லுறும் .

(இ - ள்.) பலருங்கொண்டாடும் கொல்லும் வலியினையுடையாற்கு அன்பிலாதார் இல்லைபோலும்; நிலமெல்லாம் நனையும் விரைந்த சோரி தோளிலே அலைப்பப் பேய்தானும் பூசற்களத்துள்ளார் விரும்ப வெகுண்டு ஒளியினையுடைய வேலின்வாயிலே விழுந்தவன்றன் மனமகிழப் பரிகரித்தலைச் செய்யாநின்றது எ-று.

(16)

1. தொல். புறத். சூ. 24; பேய்ப்பக்கம்.
2. தொல். புறத். சூ. 19, இளம். மேற்; புறநா. 281 .
3. கதழ் : மணி. 13 : 48 .