77. பேய்க்காஞ்சி
பிணம்பிறங்கிய களத்துவீழ்ந்தாற்
கணங்காற்ற வச்சுறீஇயன்று .

(இ - ள்.) பிணமிக்க போர்க்களத்திலே பட்டாற்குப் பேய் மிகவும் அச்சமுறுத்தியது எ-று.

(வ - று.)
கொட்கு நிமிருங் குறுகுங் குடர்சூடிப்
பெட்ப நகும்பெயரும் பேய்மகள்-உட்கப்
புனலங் குருதிப் புலால்வாய்க் கிடந்து
கனல விழிப்பவற் கண்டு .

(இ - ள்.) சுழலும் , நீளும் , குறுகும் , குடர்மாலையைச் சூடித் தன் உள்ளம் விரும்பச் சிரிக்கும், போம் , பேய்ப் பெண்; வெருவர அழகிய உதிரமாகிய நீரிற் புலாலிடத்துக் கிடந்து அழலநோக்கும் வீரனைப் பார்த்து எ-று.

(17)