அடலஞ்சா நெடுந்தகைபுண் தொடலஞ்சித் துடித்துநீங்கின்று . (இ - ள்.) கொலையஞ்சாத பெரிய நிலையினையுடையவன் புண்ணினைத் தீண்டுதற்குப் பயப்பட்டு நடுங்கிப் பேய் பெயர்ந்தது எ-று. (வ - று.) 2ஐயவி சிந்தி 3நறைபுகைத் தாய்மலர் தூய்க் கொய்யாக் குறிஞ்சி பலபாடி - மொய்யிணர்ப் பூப்பெய் தெரிய னெடுந்தகைபுண் யாங்காப்பப் பேய்ப்பெண் பெயரும் வரும் . (இ - ள்.) வெண்சிறுகடுகினைத்தூவிக் குங்கிலியமுதலான நறுநாற்றத்தைப் புகைத்துத் தெரிந்த பூவினைச்சிதறிப் பறியாக்குறிஞ்சிப்பண் பலவும்பாடிச் செறிந்த தொத்தினையுடைய மலரிட்டுத் தொடுத்த மாலை யானிறைந்த பெரிய மேம்பாட்டினையுடையவன் புண்ணை யாங்கள் பரிகரிப்பப் பேய்மகள் நீங்கும் , அணுகும் எ-று. கொய்யாக்குறிஞ்சி : வெளிப்படை . (19)
1. தொல். புறத். சூ. 24. 2. புறநா. 281 : 4-7 3.முருகு. 239. |