84. மகட்பாற் காஞ்சி
ஏந்திழையாட் டருகென்னும்
வேந்தனொடு வேறுநின்றன்று.

(இ - ள்.) அழகிய ஆபரணத்தினையுடையாளை எனக்குத் தருக வென்று சொல்லும் அரசனோடு மாறுபட்டு நின்றது எ-று.

(வ - று.)
அளிய கழல் 1வேந்த ரம்மா வரிவை
2எளியளென் றெள்ளி யுரைப்பிற் - குளியாவோ
பண்போற் கிளவியிப் பல்வளையாள் வாண்முகத்த
கண்போற் பகழி கடிது.

(இ - ள்.) அளியினையுடையகழன் 3மன்னர் அழகிய திருவை யனைய மடவாள் தாம் கொள்கைககு எளியளென்று இகழ்ந்துபேசின் , தையாவோ ? பண்ணையொத்த வார்த்தையினையுடைய இப்பலதொடியினை யுடையவள் ஒளியினையுடைய வதனமத்தவாகிய கண்போன்ற அம்பு , கடிதாக எ-று.

(24)

1. வேந்தன்.
2. நன் . சூ . 451, மயிலை. மேற்.
(பி-ம்) 3. மன்னன்