வென்றார்த்து விறன்மறவர் கன்றோடு மாதழீஇயன்று . (இ - ள்.) பகைவர் முனையினைக்கடந்து ஆரவாரித்து வெற்றியினையுடைய வீரர் கன்றுடனே பசுநிரையைக் கைக்கொண்டது எ-று. (வ - று.) 1கொடுவரி கூடிக் குழூஉக்கொண் டனைத்தால் நெடுவரை நீள்வேய் நரலும் - நடுவூர்க் கணநிரை கைக்கொண்டு கையகலார் நின்ற நிணநிரை வேலார் நிலை . (இ - ள்.) புலிகள் தம்மில் இணையொத்துத் திரட்சிகொண்ட தன்மைத்து; உயரிய மலையிடத்து நீண்டமூங்கிலொலிக்கும் ஊரினடுத்திரண்ட பசுவினைக் கைப்பற்றி அவ்விடத்துநின்ற நீங்காராய் நிணத்தைக் கோத்த வேலினையுடையார் நின்ற நிலை எ-று. ஆல் : அசை. (9)
1. தொல். புறத். சூ. 3, இளம். ந. மேற். |