92. எயிறனையழித்தல்
துணிவுடைய தொடுகழலான்
அணிபுரிசை யழிவுரைத்தன்று.

(இ - ள்.) தெளிவுடைத்தான கட்டுங்கழலோன் அழகிய மதிலின்கட் கேட்டினைச் சொல்லியது எ-று.

(வ - று.)
1அகத்தன வார்கழ னோன்றா ளரணின்
புறத்தன போரெழிற் றிண்டோள்-உறத்தழீஇத்
தோட்குரிமை பெற்ற துணைவளையார் பாராட்ட
வாட்குரிசில் வானுலகி னான்.

(இ - ள்.) அரணினுள்ளே வீழ்ந்தன,கட்டுங் கழலாற் பொலிந்த வலிய கால்; மதிலின் புறம்பே வீழ்ந்தன,பூசலைச்செய்யும் அழகிய திண்ணியதோள்; இறுகவணைத்துத் தோட்கு உரியரான இணைவளையினையுடைய தெய்வமகளிர் கொண்டாட வாளினையுடைய உபகாரி விண்ணிடத்தான் எ-று.

(7)

1. தொல். புறத். சூ. 11, இளம். மேற்.