96. குடைநாட்கோள்
செற்றடையார் மதில்கருதிக்
கொற்றவேந்தன் குடைநாட்கொண்டன்று.

(இ - ள்.) செறுத்துக் கூடாதாருடைய அரணைக்கொள்ள நினைந்து வெற்றி மன்னவன் குடையைப் புறவீடுவிட்டது எ-று.

(வ - று.)
1நெய்யணிக செவ்வே னெடுந்தேர் நிலைபுகுக
கொய்யுளைமா கொல்களிறு பண்விடுக-வையகத்து
முற்றக் கடியரண மெல்லா முரணவிந்த
கொற்றக் குடைநாட் கொள.

(இ - ள்.) நெய்யிட்டு அலங்கரிப்பனவாக,பகைவர் குருதியாடிச் சிவந்த வேல்கள்;நெடிய தேர்களும் நிற்குங்கூடங்களிலே நிற்பனவாக;கொய்த தலையாட்டாத்தினையுடைய குதிரையும் கொல்லும் யானையும் போர்க்குச் செய்த பண்ணினைக் களைக;ஞாலத்து அடையக் காவற் குறும்புகளெல்லாம் தத்தம் மாறுபாடு கெட்டன,வெற்றிக்குடையைப் புறவீடுவிட எ-று.

(2)

1. தொல். புறத். சூ. 11, இளம். மேற்.