பொன்புனை யுழிஞை சூடி மறியருந்தும் திண்பிணி முரச நிலையுரைத் தன்று. (இ - ள்.) பொன்னாலே செய்த உழிஞை மாலையை மலைந்து ஆடு வெட்டியிடும் பலியை நுகரும் திண்ணிதாக வாராற்கட்டின முரசின் நிலைமையைச் சொல்லியது. (வ - று.) கதிரோடை வெல்களிறு பாயக் கலங்கி உதிரா மதிலு முளகொல் - அதிருமால் பூக்கண் மலிதார்ப் புகழ்வெய்யோன் கோயிலுள் மாக்கண் முரச மழை . (இ - ள்.) ஒளியாற் சிறந்த பட்டத்தினையுடைய வெல்லும்யானை குத்தக் குலைந்து வீழாத புரிசையும் சில உளபோலும்; முழங்குமால் , மலர்கண்மிக்க மாலையினையுடைய இசையை விரும்பியோன் மாளிகையிடத்துப் பெரிய கண்ணினையுடைய வீரமுரசம் மழைபோல். மழைபோல் அதிருமாலென்க. (4) |