பக்கம் எண் :

(இ - ள்.) சிங்கத்தாற் சிறந்த அழகிய கொடியினையும் பசுங்கிளியினையும் பாயுங்கலையினையும் பேய்மிக்க படையினையுமுடைய துர்க்காதேவி, தலைவன் பகைவர் குறும்புமுறிய ஆனிரையைக் கொள்கையை நினைக்கிற் பகைவர் மாறுபாடு கெடத் தான் முன்னே எழுந்தருளும் எ -று.

(20)

21. வெறியாட்டு

வாலிழையோர் வினைமுடிய
வேலனொடு வெறியாடின்று.

(இ - ள்.) அழகிய ஆபரணத்தையுடையார் நினைத்த தொழில் முடிய முருகபூசை பண்ணுமவனோடு 1வள்ளிக்கூத்தை ஆடியது எ - று.

வ - று.காணி லரனுங் களிக்குங் கழன்மறவன்
பூணிலங்கு மென்முலைப் போதரிக்கண் - வாணுதல்
தான்முருகு மெய்ந்நிறீஇத் தாமம் புறந்திளைப்ப
வேன்முருகற் காடும் வெறி.

(இ - ள்.) கண்டானாயின் நிருத்தப்பிரியனாகிய நீலகண்டனும் மகிழ்வன்; கட்டும் கழலினையுடைய மறவினையாளன்றன் ஆபரணம் விளங்கும் மெல்லிய முலையினையும் பூப்போன்ற அரிபரந்த கண்ணினையும் ஒளி மிக்க நுதலினையுமுடையவள்தான் நறுநாற்றத்தை உடம்பிலே நிறுத்தி மாலை பக்கத்தே அசைய வேலினையுடைய பிள்ளையார்க்கு ஆடும் வள்ளிக்கூத்தை எ - று.

வள்ளிக்கூத்தைக் காணின் அரனும் களிக்குமென்க.

(21)

வெட்சித் திணைப்பாட்டு இரண்டும் துறைப்பாட்டுப் பத்தொன்பதும் முடிந்தன.

முதலாவது வெட்சிப்படலம் முற்றிற்று.


இரண்டாவது
கரந்தைப் படலம்
(சூத்திரம் 2.)

கதமலி கரந்தை கரந்தை யரவம்
அதரிடைச் செலவே யரும்போர் மலைதல்
புண்ணொடு வருதல் போர்க்களத் தொழிதல்
ஆளெறி பிள்ளை பிள்ளைத் தெளிவே
5பிள்ளை யாட்டொடு கையறு நிலையே
நெடுமொழி கூறல் பிள்ளைப் பெயர்ச்சி
வேத்தியன் மலிபே மிகுகுடி நிலையென

1. வள்ளிநாயகியின் வேடங்கொண்டு ஆடும் கூத்து.
2. முருகக்கடவுளுக்கு.