பக்கம் எண் :

ஐந்தாவது
நொச்சிப்படலம்
(சூத்திரம் 5.)

நுவலருங் காப்பி னொச்சி யேனை
மறனுடைப் பாசி யூர்ச்செரு வென்றா
செருவிடை வீழ்த றிண்பரி மறனே
எயிலது போரே யெயிறனை யழித்தல்
5அழிபடை தாங்கன் மகண்மறுத்து மொழிதலென
எச்ச மின்றி யெண்ணிய வொன்பதும்
நொச்சித் 1திணையுந் துறையு மாகும்.

என் - னின், நொச்சித்திணையும் துறையுமாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) நொச்சி, மறனுடைப்பாசி, ஊர்ச்செரு, செருவிடை வீழ்தல், குதிரைமறன், எயிற்போர், எயிறனையழித்தல், அழிபடைதாங்கல், மகண் மறுத்து மொழிதல் எனச் சொல்லப்பட்ட இவ்வொன்பதும் நொச்சித் திணையும் துறையுமாம் எ - று.

86. நொச்சி

ஏப்புழை ஞாயி லேந்துநிலை யரணம்
காப்போர் சூடிய பூப்புகழ்ந் தன்று.

(இ - ள்.) ஏவறையையுடைய முடக்குக்களைத் தாங்கின நிலைமையினை யுடைய எயில்காக்கும் வீரர் மலைந்த பூவைப் புகழ்ந்தது எ - று.

(வ - று.) ஆடரவம் பூண்டா னழலுணச் சீறிய
கூடரணங் காப்போர் குழாம்புரையச் - சூடினார்
உச்சி மதி 2வழங்கு மோங்கு மதில்காப்பான்
நொச்சி நுதிவே லவர்.

(இ - ள்.) ஆடும் பாம்பையணிந்தான் நெருப்பு நுகரக் கோபித்த திரிபுரத்தைக்காக்கும் அவுணர்திரளையொப்ப மலைந்தார், மேலே திங்களூரும் உயர்ந்த புரிசையைக் காவல்செய்வான்வேண்டி நொச்சிப் பூவை, 3நுனையாற் சிறந்த வேலினையுடையவர் எ - று.

வேலவர் நொச்சி சூடினாரென்க.

(1)

87. மறனுடைப் பாசி

மறப்படை மறவேந்தர்
துறக்கத்துச் செலவுரைத்தன்று.


(பி-ம்.)1. 'திணையது வகையெனமொழிப' 2. 'தவழும்' 3. 'நுனி'