பக்கம் எண் :

(இ - ள்.) மாறுபாடு கெடக் கோபமிக்க உழிஞையார் எயிலினுள் நொச்சியாரைப் போரை வென்றது. எ - று.

வ - று. செங்கண் மறவர் சினஞ்சொரிவாள் சென்றியங்க
அங்கண் விசும்பி னணிதிகழும்-திங்கள்
முகத்தா ரலற முகிலுரிஞ்சுஞ் சூழி
அகத்தாரை வென்றா ரமர்.

(இ - ள்.) சிவந்த கண்ணினையுடைய வீரர், செற்றத்தைப் பொழியும் வாள்போய் உலாவ அழகிய இடத்தையுடைய ஆகாயத்தின் அலங்கார மிகும் மதியையொத்த வதனத்தினையுடையார் கூப்பிட மேகந்தவழும் நெற்றியினையுடைய அரணினுள்ளோரைப் போர்வென்றார். எ - று.

(22)

117. முற்றுமுதிர்வு

அகத்தோன் காலை யதிர்முர சியம்பப்
புறத்தோன் வெஞ்சினப் பொலிவுரைத் தன்று.

(இ - ள்.) மதிலின் உள்ளோனுடைய முழங்குமுரசு. காலையில் ஒலிப்பப் புறத்திருந்த உழிஞையானது வெய்ய கோபத்தின் மிகுதியைச் சொல்லியது. எ - று.

வ - று.1காலை முரச மதிலியம்பக் கண்கனன்று
வேலை விறல்வெய்யோ னோக்குதலும் -மாலை
2அடுக மடிசிலென் றம்மதிலு ளிட்டார்
தொடுகழலார் மூழை துடுப்பு.

(இ - ள்.) நாட்காலையே முரசு அரணின்கண் ஒலிப்பக் கண்சிவந்து வேலை வெற்றியைவேண்டுவோன் பார்த்தானாக, மாலைப்பொழுது அடுவேம் சோறென்று சொல்லி அவ்வரணினுக்குள்ளே எறிந்தார் கட்டுங்கழலினையுடையார், மூழையினையும் துடுப்பினையும். எ - று.

அம்மதிலுள் இட்டார், இதனை அழித்து இன்றுபோய் உண்பே மென்று.

(23)

118. யானை கைக்கோள்

மாறுகொண்டார் மதிலழிய
3ஏறுந்தோட்டியு மெறிந்துகொண்டன்று.

(இ - ள்.) பகைகொண்டார் அரணங்கெட யானையையும் காவலையும் பகைவரை யெறிந்து கைக்கொண்டது. எ - று.

வ - று. ஏவ லிகழ்மறவர் வீய விகல்கடந்து
காவலும் யானையுங் கைக்கொண்டான்-மாவலான்
வம்புடை யொள்வாண் மறவர் தொழுதேத்த
அம்புடை ஞாயி லரண்.


1. தொல் புறத். சூ.11, இளம். மேற். காலைமுரசம்: சிலப். 14: 14; பதிற். 58:5-7 2. புறநா, 304: 7-8. 3. பெருங், 1. 37: 212