பக்கம் எண் :

எட்டாவது
வாகைப்படலம்
(சூத்திரம் 8.)

சீர்சால் வாகை வாகை யரவம்
அரச வாகை முரச வாகை
மறக்கள வழியொடு களவேள் விய்யே
முன்றேர்க் குரவை பின்றேர்க் குரவை
5பார்ப்பன வாகை வாணிக வாகை
வேளாண் வாகை பொருந வாகை
அறிவன் வாகை தாபத வாகை
கூதிர்ப் பாசறை வாடைப் பாசறை
அரச முல்லை பார்ப்பன முல்லை
10அவைய முல்லை கணிவன் முல்லை
மூதின் முல்லை யேறாண் முல்லை
வல்லாண் முல்லை காவன் முல்லை
பேராண் முல்லை மறமுல் லையே
குடைமுல் லையொடு கண்படை நிலையே
15அவிப்பலி யென்றா சால்பு முல்லை
கிணைநிலை யேனைப் பொருளொடு புகறல்
அருளொடு நீங்க லுளப்படத் தொகைஇ
மூன்று 1தலையிட்ட மூவீ ரைந்தும்
வான்றோய் வாகைத் திணையது வகையே.

என் - னின், வாகைத்திணையும்துறையுமாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) வாகை, வாகையரவம், அரசவாகை,முரசவாகை, மறக்களவழி, களவேள்வி, முன்றேர்க்குரவை,பின்றேர்க்குரவை, பார்ப்பனவாகை, வாணிக வாகை, வேளாண்வாகை, பொருநவாகை அறிவன்வாகை, தாபதவாகை, கூதிர்ப்பாசறை, வாடைப்பாசறை, அரசமுல்லை, பார்ப்பனமுல்லை, அவையமுல்லை, கணிவன்முல்லை, மூதின்முல்லை, ஏறாண்முல்லை, வல்லாண்முல்லை, காவன்முல்லை, பேராண்முல்லை, மறமுல்லை, குடைமுல்லை, கண்படைநிலை, அவிப்பலி, சால்புமுல்லை, கிணைநிலை, பொருளொடு புகறல், அருளொடு நீங்கல் என்று சொல்லப்பட்ட முப்பத்துமூன்றும் வாகைத் திணையும்துறையுமாம் எ-று.

155. வாகை

இலைபுனை வாகை சூடி யிகன்மலைந்
தலைகடற் றானை யரசட் டார்த்தன்று.


(பி - ம்) 1. 'தலைப்பட்ட'