பக்கம் எண் :

கடுவரை நீரிற் கடுத்துவரக் கண்டும்
நெடுவரை நீழ னிரை.

(இ - ள்.) புல்லை மேய்ந்து இளைப்பாறி இனத்துடன் கூடித் தம்மில் ஒக்கப்போவனவாகவென்று சொல்லாநின்றான், வில்லின்மேல் வைத்த கையினையும் வெல்லும் வீரக் கழலினையுமுடையவன்; தன்மேலே செந்தூக்கான மலையினின்றும் விழாநின்ற நீர்போல் முடுகிவருங்கரந்தையாரைக் கண்டும், நீண்ட வரையினது நீழலிலே ஆனிரையை எ - று.

ஆனிரையைப் புணர்ந்துடன் செல்கென்னுமெனக் கூட்டுக.

(11)

12. தலைத்தோற்றம்

உரவெய்யோ னினந்தழீஇ
வரவுணர்ந்து கிளைமகிழ்ந்தன்று.

(இ - ள்.) வலியினை விரும்பினோன் ஆனினத்தைக் கைக்கொண்டு வருதலையறிந்து உறவுமுறையார் மனமகிழ்ந்தது எ - று.

வ - று.1மொய்யண லானிரை முன்செல்லப் பின்செல்லும்
மையணற் காளை மகிழ்துடி - 2கையணல்
வைத்த வெயிற்றியர் வாட்க ணிடனாட
உய்த்தன் றுவகை யொருங்கு.

(இ - ள்.) செறிந்த அலை தாடியையுடைய பசுநிரை முன்னேபோகப் பின்னே வரும் மயிராற் கறுத்த கபோலத்தினையுடைய காளை மகிழ்ந்து கொட்டுந்துடி நிரைகொண்டுவரப் போன வெட்சியாருடைய நிலைமையை அறியாது வெறுப்பினாற் கையைக் கதுப்பிலேவைத்த வேட்டுவிச்சியர் வாள் போன்ற கண் இடந்துடிப்பச் செலுத்திற்று, பிரியத்தை, பலர்க்கு மொக்க எ - று.

மகிழ்துடி ஒருங்கு உய்த்தன்றென்க. மகிழ்துடி : வினைத்தொகை.

(12)

13. தந்துநிறை

வார்வலந்த துடிவிம்ம
ஊர்புகல நிரையுய்த்தன்று.

(இ - ள்.) வாராலே கட்டின துடி கறங்க ஊரினுள்ளார் விரும்ப ஆனிரையை மன்றத்திடத்துச் செலுத்தியது எ- று.

வ - று.3தண்டா விருப்பின டன்னை தலைமலைந்த
வண்டார் கமழ்கண்ணி வாழ்கென்று - கண்டாள்
அணிநிரை வாண்முறுவ லம்மா வெயிற்றி
4மணிநிரை மல்கிய மன்று.


1. தொல். புறத். சூ. 3, ந.மேற். 2. சீவக. 2050. 3. தொல். புறத். சூ. 3, இளம். மேற். 4. புறநா. 387 : 24.