பக்கம் எண் :

வெம்முரண் வேந்தரும் வெள்வளையார்தோள்விழைந்து
தம்மதி றாந்திறப்பர் தாள்.

(இ - ள்.) வலிய யானையும் சிவந்த பொன்னும் பிறந்தநாளிற் பெற்றவர் விருப்பமுற்று இன்புறுதல் அற்புதமோ; வண்டினம் இசைக்கும் மாலையினையும் வெவ்வியமாறுபாட்டினையுமுடைய அரசரும் சங்கவளையுடையார் தோளைவிரும்பித் தம்முடைய அரணங்களிற் கதவைத்தாம் தாளினை நீக்குவர், இந்நாளிற் படையேவாரென்று எ-று.

(24)

213. பரிசினிலை

புரவலன் மகிழ்தூங்க
இரவலன் கடைக்கூடின்று.

(இ - ள்.) உபகாரி இன்பத்திலே அசைய, இரப்பாளன்போவானாக ஒருப்பட்டது எ-று.

(வ - று.) வெல்புரவி பூண்ட விளங்கு மணித்திண்டேர்
நல்கிய பின்னு நனிநீடப் - பல்போர்
விலங்குங் கடற்றானை வேற்றார் முனைபோற்
கலங்கு மளித்தென் கடும்பு.

(இ - ள்.) பகையை வெல்லும் குதிரைபூண்ட விளங்குமணியினையுடைய திண்ணிய பொற்றேரைக் கொடுத்தபின்னும்விடைதாழ்ப்ப, பல்பூசலினையும் விலக்கும் கடல்போன்றசேனையினையுடைய பகைவர் தேசம்போலத் துளங்காநின்றது; அளிக்கத்தக்கது என்னுடைய சுற்றம் எ-று.

(25)

214. பரிசில்விடை

வேந்தனுண் மகிழ வெல்புக ழறைந்தோர்க்
கீந்து பரிசி லின்புற விடுத்தன்று.

(இ - ள்.) அரசனுடைய மனங்களிப்ப வெல்லும்புகழைச் சொன்னோர்க்குப் பெறும் பேற்றை வழங்கி இனிமைமிகவிடைகொடுத்தது எ-று.

(வ - று.) படைநவின்ற பல்களிறும் பண்ணமைந்ததேரும்
நடைநவின்ற பாய்மாவு நல்கிக் - கடையிறந்து
முன்வந்த மன்னர் 1முடிவணங்குஞ் சேவடியாற்
2பின்வந்தான் பேரருளி னான.்

(இ - ள்.) பல்லணங்கெழுமிய பல யானையையும்பூட்டமைந்த தேரினையும் தாளத்திற்கொத்த நடைபொருந்திய குதிரையையும் வழங்கிக் கடைகழிந்து முற்படவந்த வேந்தர்முடிபணியும் சிவந்த பாதத்தாலே நடந்து என்பின்னேவந்தான், மிக்க அருளினையுடையனான வேந்தன் எ-று.

பின்வந்த மன்னர்க்கு இடம் கிடையாதாம்.

(26)


1. ''மன்னர்தம், முடியொடு முடிபொருவாயின் முன்னினார்'' (கம்ப. எழுச்சி.1.) 2. பின்வருதல்: பொருந.166.