|
18. புலனறிசிறப்பிற்குச் செய்யுள்:-
“இறுமுறை யெண்ணா திரவும் பகலுஞ்
செறுமுனையிற் சென்றறிந்து வந்தார்-பெறுமுறையி
னட்டுக் கனலு மயில்வேலோ யொன்றிரண்
டிட்டுக் கொடுத்த லியல்பு” [பு. வெ. வெட்சி. 17]
எனவரும். புலனறிசிறப்பு - வெம்முனைநிலை உணர்த்தியோர்க்குத் தம்மினும்
மிக்க சிறப்புச்செய்தல்.
19. பிள்ளைவழக்கிற்குச்
செய்யுள்:-
“புல்லார் நிரைகருதி யாஞ்செல்லப் புண்ணலம்
பல்லா ரறியப் பகர்ந்தார்க்குச்-சொல்லாற்
கடஞ்சுட்ட வேண்டா கடுஞ்சுரையா நான்கு
குடஞ்சுட் டினத்தாற் கொடு” [பு. வெ. வெட்சி. 18]
எனவரும். பிள்ளைவழக்கு - கரும்பிள்ளை நிமித்தங் கூறியார்க்கு விதந்து
கொடுத்தல்.
20. பெருந்துடிநிலைக்குச் செய்யுள்:-
“முந்தை முதல்வர் துடிய ரிவன்முதல்வ
ரெந்தைக்குத் தந்தை யிவனெனக்கு-வந்த
குடியொடு கோடா மரபினாற் கின்னும்
வடியுறு தீந்தேறல் வாக்கு” [பு. வெ. வெட்சி. 19]
எனவரும்.
21. கொற்றவை நிலைக்குச் செய்யுள்:-
“ஆளி மணிக்கொடிப் பைங்கிளிப் பாய்கலைக்
கூளி மலிபடைக் கொற்றவை-மீளி
யரண்முருங்க வாகோள் கருதி னடையார்
முரண்முருங்கத் தான்முந் துறும்” [பு. வெ. வெட்சி. 20]
எனவரும்.
22. வெறியாட்டிற்குச் செய்யுள்:-
“காணி லரனுங் களிக்குங் கழன்மறவர்
பூணிலங்கு மென்முலைப் போதரிக்கண்-வாணுத
றான்முருகு மெய்ந்நிறீஇத் தாமம் புறந்திளைப்ப
வேன்முருகற் காடும் வெறி” [பு. வெ. வெட்சி. 21]
எனவரும். முருகு - நறுநாற்றம். (5) |