பக்கம் எண் :

32 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்

 

     12. வென்றியொடு நெடும்புகழ் விளைக்குமென்றிறைவன்
தொன்று வந்த தோன்மலிபுரைத்தற்குச்
செய்யுள்:-

     “நின்ற புகழொழிய நில்லா வுயிரோம்பி
     யின்றுநாம் வைக லிழிவாகு-மென்றொளிறும்
     பாண்டி னிரைதோல் பணியார் பகையரணம்
     வேண்டி லெளிதென்றான் வேந்து”
            [பு. வெ. உழி. 12]

எனவரும். பாண்டில் - கண்ணாடி. தோல் ஈண்டு ஆகுபெயர்.

    
13. கருதார்காக்குங் கடிமதிற்குமரிமேல் ஒருதானாகி
உடன்றகுற்றுழிஞைக்குச்
செய்யுள்:-

    
“குளிறு முரசினான் கொண்டா னரணங்
     களிறுங் கதவிறப் பாய்ந்த-வொளிறு
     மயிற்றுப் படைந்த வணியெழு வெல்லா
     மெயிற்றுப் படையா லிடந்து”
                [பு. வெ. உழி. 13]

எனவரும்.

    
14. வளையினமொலிப்ப வயிர்கிளர்ந்தார்ப்ப மிளைபிறக்கொழிய
விரைந்த பக்கத்திற்குச்
செய்யுள்:-

    
“அந்தரந் தோயு மமையோங் கருமிளை
     மைந்தர் மறிய மறங்கடந்து-பைந்தார்
     விரைமார்பின் வின்னரல வெங்கணை தூவார்
     வரைமார்பின் வைகின வாள்”
                [பு. வெ. உழி. 14]

எனவரும். வில்-வின்னாண். தூவுவார்தூவாரென விகாரம்பெற்று நின்றது.

    
15. பாடருந்தோற்படை ஈடுசான்மறவர் ஆடலோடடைந்த
பக்கத்திற்குச்
செய்யுள்:-

    
“நிரைபொறி வாயி னெடுமதிற் சூழி
     வரைபுகு புள்ளின மான-விரைபடைந்தார்
     வேலேந்து தானை விறலோன் விறன்மறவர்
     தோலேந்தி யாட றொடர்ந்து”
                [பு. வெ. உழி. 15]
 
எனவரும். பொறி, நூற்றுவரைக் கொல்லி முதலிய இயந்திரங்கள்.