மிருபாற் படையு மேத்த நெடுந்தகை
பொருபோர்ப் பொலிந்த தானை நிலையுங்
கணையும் வேலுந் துணையுற மொய்த்தலிற்
சென்ற வுயிரி னின்ற யாக்கை
யிருநிலந் தீண்டா வெருவரு நிலையு
மருவரை மார்புதம் மலர்முலை குளிப்பத்
தெரிவையர் முயங்கிய சிருங்கார நிலையும்
வாள்வாய்த் திட்ட வடுவாழ் யாக்கைக்
கேள்கண்டு கலுழ்ந்த வுவகைக் கலுழ்ச்சியுந்
தம்முடை யிறைவன் விசும்படைந் தானென
வெம்முர ணானுயிர் வேள்வி வேட்டலுங்
காய்கதிர் நெடுவேற் கணவனைக் காணிய
வாயிழை சென்ற பக்கமு மதாஅன்
றிருபெரு வேந்தர் தாமுஞ் சுற்றமு
மொருவரு மொழியாத் தொகைநிலை யுளப்படச்
செப்பிய நாலேழ் திறத்தன வெல்லாந்
துப்பமை தும்பைத் துறையெனப் படுமே.
இது முற்கூறிய தும்பைத்திணை இத்துணைத்துறையுடைத் தென்கின்றது.
(இ - ள்.) கருங்கழல்வேந்தன் செங்களங்கருதிப் பசுந்துணர்த் தும்பை
வெண்பூச்சூடல் முதலியனவும்
ஈறாகக் கிடந்த இருபெரு வேந்தர்
தாமுஞ்சுற்றமும் ஒருவருமொழியாத் தொகை நிலையுங் கூடச்
சொல்லப்பட்ட
இருபத்தெட்டுவகையும் வலியமைந்த தும்பைத் திணையின் துறையென்று
சொல்லப்படும்,
எ - று.
1. கருங்கழல்வேந்தன் செங்களங்கருதிப் பசுந்துணர்த்தும்பை
வெண்பூச்சூடற்குச் செய்யுள்:-
“கார்கருதி நின்றதிருங் கௌவை விழுப்பணையான்
சோர்குருதி சூழா நிலநனைப்பப்-போர்கருதித்
துப்புடைத் தும்பை மலைந்தான் றுகளறுசீர்
வெப்புடைத் தானையெம் வேந்து” [பு. வெ. தும். 1]
எனவரும்.
2. சூடியபின்னர்த் தொடுகழல்வயவர்க்கு நாடுமுதல்கொடுத்த
பீடுபெறும் அரவத்திற்குச் செய்யுள்:- |