போற்றரு மிறைக்கெதிர் புகழ்ந்தனர் பரவலும்
விடுசுட ரெறிக்கு மேனிவா னவனைப்
படுபயன் கருதிப் பழிச்சினர்ப் பணிதலு
மருமலர்க் கோதை மடவர றலைவனை
விரிமலர்த் தாமம் விழைந்த கைக்கிளையு
மல்லிடை விரும்பா தவன்முயக் கமர்ந்து
செல்பவள் செல்வகை தெரிந்தபெருந் திணையும்
வில்லேர் நுதலி விறலோன் மார்பும்
புல்லேம் யாமெனப் புலந்த புலவியும்
படிமிசை யியங்காப் பணிமொழி மகளிர்
கடவுளை நயந்த கடவுட் பக்கமும்
பூதலத் தரிவையர் பொருவில்வா னவரைக்
காதலித் துரைத்த கடவுட் பக்கமு
மிழையணி மங்கைய ரீறில காமங்
குழவி மருங்கிற் கூறிய பகுதியு
நீங்காக் காதன் மைந்தரு மகளிரும்
பாங்குறக் கூடும் பதிநிலை யுரைத்தலு
மெனமுறை தொகுத்த வேழேழ் துறையும்
வினவிய பாடாண் டிணையது விரியே.
இது முற்கூறிய பாடாண்டிணை இத்துணைத்துறையுடைத் தென்கின்றது.
(இ - ள்.) ஒளியும் ஆற்றலும் ஓம்பாவீகையும் அளியுமென்றிவை
ஆய்ந்தினிதுரைத்தல் முதலாக
நீங்காக்காதல் மைந்தரும் மகளிரும்
பாங்குறக்கூடும் பதிநிலையுரைத்தல் ஈறாக முறையே தொகுத்த
நாற்பத்தொன்பது துறையும் மேற்சொல்லப்பட்ட பாடாண்டிணையது விரியாம்,
எ- று.
1. ஒளியும் ஆற்றலும் ஓம்பாவீகையும் அளியுமென்றிவை
ஆய்ந்தினிதுரைத்தற்குச் செய்யுள்:-*
“மன்னர் மடங்கன் மறையவர் சொன்மாலை
யன்ன நடையினார்க் காரமுதம் - துன்னும்
பரிசிலர்க்கு வானம் பனிமலர்ப் பைந்தா
ரெரிசினவேற் றானையெங் கோ” [பு. வெ. பா. 1]
எனவரும்.
* புறநா. 283-பாடாண்பாட்டு. |