தமிழ்நெறி விளக்கம் 34

மக்கள்

8.வெற்பன் குறவர் விடலை யெயினர்
ஒற்கமில் குறும்பொறை நாடன் குடவர்
மகுண னுழவர் சேர்ப்பன் பரதவர்
இனையன பிறவு மக்கட் பெயரே.

     (எ-து.) மக்கட்பெயர் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ-ள்.)   வெற்பன்,   விடலை,  குறும்பொறைநாடன்,   1மகுணன்,
சேர்ப்பன் என்பன  தலைமகன்  பெயர், குறவர், எயினர்,  குடவர், உழவர்,
பரதவ ரென்பன அந்நிலத்து வாழ்வார் பெயர் என்றவாறு.

     பிறவுமென்றதனாற்  பொருப்பன்,  மலையன்,  சிலம்பன்,  கொடிச்சி,
குறத்தி, குறவர், இறவுள ரெனவும்; காளை, விடலை, எயினர், எயிற்றி, மறவ
ரெனவும்; அண்ணல், மீளி, இடைச்சியர், ஆய்ச்சியர்,  கோவலர்,  இடையர்,
பொதுவர், ஆயரெனவும்; ஊரன்,  கிழத்தி,  மனைவி,  கடையர்,  கடைசிய
ரெனவும்;     கொண்கன்,    துறைவன்  துறைவி,   பரத்தி,    நுளையர்,
நுளைச்சியரெனவும் வருவனவெல்லாம் கொள்க.(8)

செயல்

9.நிறைத்தே னழித்தலு நெறிச்சென் றலைத்தலும்
2ஒருக்கின மோம்பலு முழவொடு பயிறலும்
திரைக்கடற் சேறலோ டினையன செயலே.

     (எ-து.) செய்தியாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ-ள்.) தேனழித்தலும், ஆறலைத்தலும், நிரைமேய்த்தலும், உழுதலும்,
கடலூடு புகுதலும்    என்றிப்   பெற்றியெல்லாம்   ஆண்டைச்  செய்தியாம்
என்றவாறு.

     இனையன   என்றதனால்   தினையரிதலும்,   கிழங்கு   அகழ்தலும்;
ஊரெறிதலும்,  நிரைகோடலும்;  வரகரிதலும்,  ஏறுகோடலும்;  விழவயர்தலும்,
புனலாடலும்; உப்பாக்குதலும், முத்துக்  குளித்தலும்  உள்ளிட்டன  வெல்லாங்
கொள்க.(9)


    1. மதுரைக் கோவையென்னும் நூலில் மகுணன் என்னும் சொல்லாட்சி
மிகுதியாகக் காணப்படுகிறது.

    2. ஒருக்கினம் = ஒருக்கு+இனம்-சேர்க்கப்பட்ட மூவினம்; ஆடு, பசு
எருமையென்பன.